நாமக்கல் மாவட்டத்தில் காவிரி பாசன பகுதிகளான ஜேடர்பாளையம், பரமத்தி வேலூர், மோகனூர், ஒருவந்தூர் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் ராஜவாய்க்கால், குமாரபாளையம், பொய்யேரி, மோகனூர் வாய்க்கால்கள் மூலம் 16 ஆயிரத்து 143 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுவருகிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வாய்க்கால்கள் புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் இதனை மறுசீரமைத்து, கான்கிரீட் சுவர், மிகுதிநீர் மதகுகள் உள்ளிட்ட பணிகளைச் செய்திட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைத்திருந்தனர்.
அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு 79 கிலோமீட்டர் நீளம் கொண்ட கால்வாய்களைச் சீரமைப்புசெய்ய 184 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், வாய்க்கால்களில் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடையாததால், இப்பருவத்திற்கு காவிரி நீர் பயன்படுத்த முடியாது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதே சமயம் மறுசீரமைப்பு நடைபெறும் வாய்க்கால்களில் 7 முதல் 10 அடி உயரம் வரை உள்ள கரைகளில் தடுப்புச் சுவர்கள் 4 அடி உயரம் வரை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.
வெள்ளம், மழை காலங்களில் அதிகளவு தண்ணீர் வந்தால் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்ந்து போக வாய்ப்புள்ளது. எனவே தடுப்புச் சுவரின் உயரத்தை குறைந்தபட்சம் ஏழு அடியாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மறுசீரமைப்பு முறையாக திட்டமிடாமல் தடுப்புச் சுவரின் உயரம் குறைவாக அமைப்பது இத்திட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும்.
காவிரி இருந்தும் விவசாயம் செய்ய வழியில்லை தமிழ்நாடு அரசு முறையாக கால்வாய் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லையென்றால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம் எனத் தெரிவிக்கிறார் ஒருவந்தூர் நீரேற்று பாசன விவசாயிகள் கூட்டுறவு சங்கத் தலைவர் செல்ல. ராசாமணி.
இது குறித்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணி கூறுகையில், "வாய்க்கால்களின் உயரம் 10 அடி வரை உள்ள நிலையில் 4 அடிவரை மட்டுமே தடுப்புச் சுவர் கட்டப்படுகிறது.
வெள்ளம், மழை காலங்களில் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க தடுப்புச்சுவர் உயரத்தை அதிகரிக்க முத்தரப்புக் கூட்டத்தை கூட்டி பணிகளைக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மக்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளை ரயில்வே துறை கைவிட வேண்டும் - வைகோ