நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பேரூராட்சியில் சுமார் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பிஎஸ்என்எல் செல்ஃபோன் சேவையின் சந்தாதாரர்களாக கிட்டத்தட்ட 70 விழுக்காடு மக்கள் இருந்தனர். ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 40 விழுக்காடாகவே உள்ளது.
சிக்னலே இல்லை... எப்படி ஃபோன் செய்வது... மக்கள் புலம்பல்! - நாமக்கல்
நாமக்கல்: எருமப்பட்டி பேரூராட்சி பகுதியில் சிறு வணிக நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் பிஎஸ்என்எல் சேவை கிடைக்காததால் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், இங்கு செயல்பட்டுவரும் மின்னணு தொலைபேசி நிலையம் கடந்த எட்டு மாதங்களாக பராமரிப்பில்லாமல் பூட்டிகிடப்பதாகவும், இங்கு செயல்பட்டு வரும் பிஎஸ்என்எல் செல்ஃபோன் கோபுரம் மூலம் அப்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தொலை தொடர்பை வழங்கி வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பிஎஸ்என்எல் செல்ஃபோன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் யாரும் ஃபோன் செய்ய இயலவில்லை என்றும், அதே சமயம் தங்களது ஃபோன்களுக்கும் எந்தவிதமான கால்களும் வருவதில்லை என்றும் இது குறித்து புகார் அளிக்க தொலைபேசி நிலையத்திற்குச் சென்றால் அங்கும் அலுவலகம் கடந்த ஆறு மாதமாக பூட்டியே கிடப்பதாகவும், யாரிடம் இது குறித்து புகார் அளிப்பது என்றே தெரியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.