கோழிக் கறி சாப்பிடுவதால் கொரோனோ வைரஸ் பரவுவதாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரவிவந்த நிலையில், கறிக்கோழியின் விற்பனை கடுமையாக சரிந்தது. இதனால் உயிருடன் இருக்கும் கறிக்கோழி 80 ரூபாயிலிருந்து சரிந்து கடந்த 5ஆம் தேதியிலிருந்து 61 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது படிப்படியாக விலை குறைந்து ஒரு கிலோ 46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பண்ணையில் கோழி, வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று இருப்பதை அம்மாநில அரசு உறுதி செய்தது. நோய் தொற்று உள்ள கோழிகள், வாத்துகளை அழிக்கவும், சில்லறை விற்பனைக்காக வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வரும் கோழிகள், முட்டைகளை படிப்படியாக குறைக்கவும் கேரளா மாநில கால்நடை பராமரிப்பு துறை உத்தரவிட்டது.
அதன்காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கறிக்கோழியின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று கறிக்கோழியின் விலை கிலோ ஒன்றுக்கு 14 ரூபாய் குறைந்து 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே கொரோனோ வைரஸ் பீதியால் கறிக்கோழி விலை குறைந்திருந்த நிலையில், பறவை காய்ச்சல் எதிரொலியால் கறிக்கோழியின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியானது கறிக்கோழி உற்பத்தியாளர்களை கவலையடையச் செய்துள்ளது.
இதுகுறித்து கறிக்கோழி உற்பத்தியாளர் வாங்கிலி சுப்பிரமணி, கறிக்கோழி விலை வீழ்ச்சியால் நாள் ஒன்றுக்கு 15 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 30 சதவீதம் அளவுக்கு உற்பத்தி குறைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். தற்போது முட்டையின் விலையும் சரிந்து 3 ரூபாய் 8 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க... சமூகத்தில் அந்தஸ்தைப் பெற உழைக்கும் திருவள்ளூர் பெண்களின் கதை!