நாமக்கல் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், அக்கட்சியின் அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் மாநாடு இன்று நடைபெற்றது. பாஜகவின் நாமக்கல் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் பாஜகவின் மாநில தலைவர் டாக்டர் எல். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’காங்கிரஸ்-திமுக கூட்டணி தான் தமிழ் கலாசாரத்தையும், பண்பாட்டையும் தமிழர்களையும் கொன்று குவித்தது. இதற்கு மாறாக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவர்களை நினைவு கூர்ந்து வருகிறார். திருக்குறளை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். எங்கு பேசினாலும் திருக்குறளை முன்னுதாரணமாக கூறிவருகிறார்.
தமிழர்களையும், தமிழ் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பற்றி பேசுவதற்கு ராகுல் காந்திக்கு எவ்வித அருகதையும் கிடையாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி. அதில் பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள்’ என்றார்.
இந்திய மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல் நடத்துவது குறித்து எழுப்பிய கேள்விக்கு, ’2014ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய மீனவர்கள் மீது ஒரு தாக்குதல் நடத்தப்படவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இலங்கையிலுள்ள இந்திய தூதரை மத்திய அரசு கூப்பிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இனி இது போன்று நடக்கக்கூடாது என இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’என்றார்.