கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன் சில பண்ணைகளில் வாத்துகள் திடீரென இறந்தன. அவற்றின் மாதிரிகளை சோதித்ததில், அவற்றுக்கு பறவை காய்ச்சல் நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. நோய் பரவாமல் தடுக்க ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள வாத்துகள் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அப்பகுதிகள் தனி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வெளியிடங்களிலிருந்து வாத்துகள் மற்றும் தீவனங்களை கொண்டு வரவும், அங்கிருந்து வெளியே எடுத்துச் செல்லவும் தடை விதித்து, இதனை மாநிலப் பேரிடராகவும் கேரள அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினமும் சுமார் ஒன்றரை கோடி முட்டைகள், கறிக்கோழிகள், கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பண்ணைகளின் நுழைவாயிலில் வாகனங்கள் முழுமையாக ரசாயனங்கள் கலந்த கிருமி நாசினியில் நனையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தொடர்ந்து நோய் எதிர்ப்பு தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதோடு, அவை கூண்டுக்குள் வளர்க்கப்படுவதால், பிற பறவைகளுடன் கோழிகளுக்கு தொடர்பு ஏற்பட வாய்ப்பில்லை என தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சங்கச் செயலாளர் சுந்தர்ராஜன் கூறியுள்ளார். அதோடு பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத்துறையின் அறிவுறுத்தல்கள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு மிகக்குறைவு என்றும் அவர் தெரிவித்தார்.