நாடு முழுவதும் விவசாயத்தின் வளர்ச்சிக்கும், விவசாயிகளை மேம்படுத்தி வேளாண் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய - மாநில அரசுகள் வேளாண் துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து, விவசாயிகளுக்கு மானியங்களை வழங்கி வருகிறது. மேலும் வேளாண் தொழில்நுட்பங்கள் வழங்கி வேளாண் விளை பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டு மழையளவு குறைவாகக் காணப்படும் நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் விளைப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள சீராப்பள்ளி கிராமம் குஞ்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி என்ற விவசாய பெண்மணி எள் சாகுபடி செய்வதில் சாதனை படைத்துள்ளார். இவர் ஒரு ஹெக்டரில் 1,210 கிலோ கருப்பு எள் மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையைப் போற்றும் விதமாக இவருக்கு 2017-18ஆம் ஆண்டிற்கான ‘கிருஷி கர்மான் முன்னோடி விவசாயி’ விருதினை மத்திய அரசு வழங்கியுள்ளது. சமீபத்தில் கடந்த 2ஆம் தேதியன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அதற்கான விருது மற்றும் ரூ. 2 லட்சம் காசோலையை விவசாயி பாப்பாத்தியிடம் வழங்கி, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விவசாய பெண்மணி பாப்பாத்தி நாமக்கல் மாவட்டம் குஞ்சாம்பாளையம் சீராப்பள்ளி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் காவிரி ஆற்றுப் பாசனம் மற்றும் ஆழ்குழாய் கிணற்று பாசனத்தை பயன்படுத்தி வேளாண்மை செய்து வருகின்றனர். மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், மஞ்சள், கரும்பு, எள், நிலக்கடலை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
குறுவை பயிராகக் கருப்பு எள்ளை சாகுபடி செய்வது தங்கள் பகுதிக்கு நல்ல விளைச்சல் தரும் என்பதால் விவசாய பெண்மணி பாப்பாத்தி தமது விவசாய நிலத்தில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் கருப்பு எள்ளை சாகுபடி செய்தார். இதனையடுத்து 85 நாள் பயிரான கருப்பு எள் நன்கு விளைந்து, ஏக்கருக்கு 1,210 கிலோ சாகுபடி கிடைத்துள்ளது.
தனது கணவர் 31 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்ட போதும், வயதான பெண்மணியாக இருந்து கொண்டு, தனது மகனின் துணையோடு இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளது அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து விவசாயி பாப்பாத்தி கூறுகையில், ‘அனைவரும் இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும். அதனால்தான் இந்த சாதனையை செய்ய முடிந்தது. பரமத்தி வேளாண்மை அலுவலகம் அளித்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினேன். குறுவை பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை அனைவரும் சாகுபடி செய்தால் குறைந்த காலத்தில் அதிக வருவாய் பெற முடியும். பிரதமர் விருது அளித்துள்ளது எங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியாக உள்ளது. விவசாயிகள் அனைவரையும் கௌரவப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இனியும் தொடர்ந்து விவசாய பணிகளை செய்து வருவேன். விருதுகளை வழங்க மத்திய மாநில அரசுகளுக்கும் வேளாண்மை துறை அதிகாரிகளுக்கும் நன்றி என்றும் தெரிவித்தார்.
‘சிறந்த விவசாயி’ பாப்பாத்தி விருது பெற்றுள்ள விவசாய பெண்மணி பாப்பாத்தியின் மகன் ரமேஷ் கூறுகையில், ‘எங்களது தாயார் இவ்வளவு வயதான காலத்திலும் தொடர்ந்து விவசாயம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குறுவை பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். அவருக்கு நான் உதவி செய்து வருகிறேன். இவ்வளவு நாள் விவசாய தொழில் செய்து வந்த எங்களுக்கு பிரதமர் கையால் விருது கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களைப்போன்ற விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களை சொல்லித் தருவதோடு, இதுபோன்று விருதுகள் அளித்து, ரூ. 2 லட்சம் உதவியும் அளித்து ஊக்கமளித்து வருவது தொடர்ந்து விவசாயம் செய்திட ஆர்வத்தை ஏற்படுத்துகிறது’ என்றார்.
பரமத்தி வட்டார வேளாண்மை உதவி அலுவலர் ராதாமணி கூறும்போது, ‘விவசாயி பாப்பாத்தி அம்மாளுக்கு பல்வேறு வேளாண் தொழில்நுட்பங்களை அவ்வப்போது வழங்கி வந்தோம். இப்பகுதியில் நிலக்கடலை, எள் போன்றவை நன்கு விளைச்சல் தரும் என்பதால் எள் பயிருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவருக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கினோம். அதன்படியே விதை மற்றும் உரம் நேர்த்தி செய்து அவர் விவசாயம் செய்ததால் இன்று நல்ல மகசூல் பெற்றுள்ளார். பிரதமர் கையினால் விருது வாங்கியுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது’ என்றார்.
வயதான பெண்மணியாக இருந்து கொண்டு விவசாய தொழிலை முழுமையாக நம்பி கால்நடைகளையும் வளர்த்துக் கொண்டு, இந்த சாதனையை செய்துள்ள விவசாயி பாப்பாத்திக்கு அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளன. கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து வருகிறார் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வயதான விவசாய பெண்மணி பாப்பாத்தி.
இதையும் படிங்க: செண்டு மல்லிக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி