நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் நாமகிரி பேட்டையில் படுகொலை செய்யப்பட்ட இரவு காவலாளி பரமசிவம் வழக்கை கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும், சேலம் மாவட்டம் ஓமலூர் செம்மமாம்பட்டி ஏனாதியில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை அகற்றியதோடு விடுதலை சிறுத்தைகள், பொது மக்கள் மீது பொய் வழக்கு புனைந்த காவல் துறையை கண்டித்தும் கரூரில் சமூக செயற்பாட்டாளர் ஜெகநாதன் படுகொலையை கண்டித்து நாமக்கல்லில் நேற்று (செப்-29) பூங்கா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருமாவளவன் பேசுகையில், ‘சேலம் ஏனாதியில் அம்பேத்கர் சிலை அனுமதி இல்லாமல் வைத்தது தவறு தான். தமிழகத்தில் அம்பேத்கர் சிலையை வெண்கல சிலையாக தான் வைக்க வேண்டும் என கூறுகின்றனர் இந்த நடைமுறை இந்தியாவில் எங்குமே கிடையாது. வெளிநாட்டில் புகழ் பெற்ற இடங்களில் அம்பேத்கர் சிலை வைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சிலை வைப்பதில் பல்வேறு பிரச்சனை உள்ளன. ஏனாதில் அம்பேத்கர் சிலையை காவல்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர், இதில் பொதுமக்கள், விசிக கட்சியினர் அடித்து துன்புறுத்தப்பட்டனர். வீதிக்கு வீதி விநாயகர் சிலை வைப்பது கலாச்சார விழா என்கிறனர். புதிய இந்தியாவின் தந்தையாக அம்பேத்கர் இருந்து வருகிறார்.