நாமக்கல் நரசிம்மர் கோயிலில் பிச்சையெடுத்து வந்தவர் 63 வயதான ரவி(எ) சீனிவாசன். இவரது குடும்பம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரை கைவிட்ட நிலையில், ஒன்பது ஆண்டுகளாக நரசிம்மர் கோயில் அருகே நீண்ட முடியுடன் பிச்சையெடுத்து வந்தார்.
சீனிவாசனைக் காப்பகத்தில் ஒப்படைக்க அப்பகுதி மக்கள் ‘அட்சயம் அறக்கட்டளை’ என்ற தனியார் அமைப்பின் உதவியை நாடினார். இந்நிலையில் நேற்று நரசிம்மர் கோயிலுக்கு வந்த அட்சயம் அறக்கட்டளையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், சீனிவாசனை அழைத்து வந்து முடிகளை நீக்கி தூய்மைப்படுத்தியும், சவரம் செய்தும் புத்தாடை அணிவித்தனர். பின்னர் அவரை ராசிபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மக்கள் சேவையே மகத்தான சேவை 'அட்சயம் அறக்கட்டளை' இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அட்சயம் அறக்கட்டளையின் தலைவரான தனியார் கல்லூரியின் பேராசிரியர் நவீன்குமார் கூறுகையில், "தாங்கள் ஆறு வருடங்களாக நாமக்கல், குமாரபாளையம், பரமத்தி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 385 யாசகர்களுக்கு மறுவாழ்வு அளித்து காப்பகத்தில் வைத்துப் பராமரித்து வருகிறோம்.
தங்கள் அமைப்பில் உள்ளவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் ஆவர். பிச்சைக்காரர்களுக்கு மக்கள் பணம் அளிக்கவேண்டாம். அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் யாசகர்களே இல்லாத மாநிலமாக மாற்றுவதே தங்கள் அமைப்பின் நோக்கம்” எனத் தெரிவித்தார்.