யார் பெரிசு அடிச்சு காட்டு - வடிவேலு பட பாணியில் திமுக அதிமுகவினர் வாக்குவாதம் நாமக்கல்: பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள் என 18 நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது நகராட்சி வளர்ச்சி பணி குறித்து விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, திமுக பெண் நகரமன்ற உறுப்பினர் தங்கள் வார்டு பகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் சமுதாய கூடத்திற்கு பூமி பூஜை போடப்பட்ட இடத்தில் சமுதாயக்கூடம் வருவதை, அதிமுகவினர் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுப்பினார். அதிமுக நகரமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, திமுக உறுப்பினரிடம் வாக்குவாதம் செய்தனர்.
தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து மற்றொரு திமுக உறுப்பினர் விமர்சனம் செய்தார். அப்போது நகரமன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதில் எந்த கட்சி பாரம்பரியம் வாய்ந்த சிறந்த கட்சி என்று ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் நகரமன்ற தலைவர், துணை தலைவர் தலையிட்டு இரு தரப்பினரையும் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் கட்சி குறித்து வசைபாடினர்.
இதையடுத்து நகரமன்ற தலைவர் செல்வராஜ் அவசர கதியில் கூட்டத்தை நிறைவு செய்தார். மேலும், அரசியல் சார்பற்று பொதுமக்கள் கோரிக்கைகள் மற்றும் நகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மட்டுமே நகரமன்ற கூட்டத்தில் இனி விவாதம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். கோயில் திரைப்படத்தில் வரும் வடிவேல் பட பாணியில் எந்த கட்சி பெரியது என நடைபெற்ற விவாதம் நகரமன்ற கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:திண்டுக்கல்லில் நடந்த கிராம சபைக் கூட்டம் - அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்