நாமக்கல்லில் இன்று தமிழ்நாடு பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலிலிருந்து பூசாரிகள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து கலந்துகொண்டனர்.
‘உண்டியல் காசு எங்களுக்கே சொந்தம்’ - சொந்தம் கொண்டாடும் பூசாரிகள்! - நமக்கல்
நாமக்கல்: தமிழ்நாட்டிலுள்ள கோவில்களிலிருக்கும் உண்டியல்களில் விழும் காணிக்கைகளை கோயில் பூசாரிகளுக்கு ஊதியமாக வழங்க வேண்டும் என பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்படுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பூசாரிகள் நலசங்கத்தின் மாநிலத் தலைவர் வாசு, "பூசாரிகள் நலவாரியத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். பூசாரிகளுக்கு ஓய்வூதியம், இலவச வீட்டுமனை பட்டா ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம்தோறும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், எங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை" என குற்றம்சாட்டினார்.
மேலும், "பூசாரிகளின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய, ஊதியத்தை வருவாய்துறை மூலமாக இல்லாமல், கோயில்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளைக் கொண்டு வழங்க வேண்டும். மேலும், அதிகளவு பக்தர்கள் வரும் பிரசித்தி பெற்ற கோயில்களை காலை 6 மணிக்கு திறந்து இரவு 9 மணி வரை செயல்படுத்த வேண்டும்” எனவும் தெரிவித்தார்.