நாமக்கல் தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்தவர், கே.பி.பி.பாஸ்கர். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பாஸ்கர், அவரது மனைவி உமா மற்றும் தனது பெயரிலும் சட்டவிரோதமாக நிலம், நகை, சொத்துக்கள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக 2011 ஆம் ஆண்டு ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் சொத்துக்கள் மட்டுமே பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரில் இருந்து வந்த நிலையில், 2021 ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 7.5 கோடி ரூபாய் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் 7.5 கோடி ரூபாய் சொத்து மதிப்பில் சட்ட ரீதியாக வாங்கப்பட்ட நிலங்கள் மற்றும் நகைகளை தவிர, சட்ட விரோதமாக 4.72 கோடிக்கு வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது அவரின் வருமானத்தை விட 315% அதிகம் எனவும் விசாரணையில் தெரிய வந்தது.
அதேநேரம் 2016 ஆம் ஆண்டு நடத்தி வந்த தனியார் போக்குவரத்து நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்துள்ளது. ஆனால் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்கு பிறகு, படிப்படியாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.