கரோனா தொற்று எதிரொலி: ஆஞ்சநேயர் கோயில் அலுவலகம் மூடல் - கோயில் நிர்வாக அலுவலருக்கு கரோனா
நாமக்கல்: பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் தலைமை எழுத்தருக்கு கரோனா நோய் தொற்று உறுதியானதையடுத்து கோயில் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் 18அடி கொண்ட பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோயில் கரோனா நோய் தொற்று காரணமாக கடந்த ஐந்து மாத காலமாக பூட்டப்பட்டிருந்தது.
இக்கோயிலானது தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி சில விதிமுறைகளுடன் செப்டம்பர் 7ஆம் தேதியன்று பக்தர்கள் வழிபாடு செய்யும் வகையில் திறக்கப்பட்டது.
இந்நிலையில், ஆஞ்சநேயர் கோயில் நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் தலைமை எழுத்தருக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் காய்ச்சாலால் அவதிப்பட்ட அவர் நோய் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் தொற்று உறுதியானதையடுத்து கோயில் நிர்வாக அலுவலகம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது
மேலும் கோயில் பட்டாச்சாரியர்கள், பணியாளர்கள், அலுவலர்கள், இவர்களின் குடும்பத்தினர் என அனைவருக்கும் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் வைத்து தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எனினும் கோயிலில் வழக்கம்போல் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதேபோல் நாமக்கல் நகரில் டாக்டர்.சக்கரன் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் வெளி மாவட்டத்தை சேர்ந்த வங்கியின் கணக்கருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து வங்கி மூடப்பட்டு செப்டம்பர் 21ஆம் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என வங்கியின் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.