நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் களைகட்டிய திருக்குட நன்னீராட்டு விழா நாமக்கல்: தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் என்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தான். ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலானது நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது. மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மரும், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே இந்தக் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரில் உள்ள நரசிம்மர், திறந்த வெளிகளுடன் ஆஞ்சநேயரை கைகூப்பி வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் சிலையானது 18 அடி உயரம் கொண்ட ஒரே கல்லில் உருவானது. நாமக்கல் ஆஞ்சநேயரை பொறுத்தவரைக்கும் காற்று, மழை , வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் கைகூப்பி வணங்கியவாறு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். தமிழ்நாடு முழுவதும் தினமும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தந்து ஆஞ்சநேயரின் அருளை பெற்று செல்கின்றனர்.
முன்னதாக இந்த கோயிலுக்கு 2009-ஆம் ஆண்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு திருக்குட குடமுழுக்கு பெருவிழா நடத்தப்பட்டது. தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி, கடந்த 30 ஆம் தேதி அன்று மாலை 4 மணிக்கு வேள்வி அமைக்கப்பட்டு கும்ப பூஜை நடத்தப்பட்டன. தொடர்ந்து 31-ஆம் தேதி காலை அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு இன்று (நவ.1) முக்கிய நிகழ்வான திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி பட்டாச்சாரியர்கள் தமிழ் முறைப்படி ஆஞ்சநேயரின் உற்சவர் சிலைக்கு, புனித நீர் ஊற்றி திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை வெகு விமரிசையாக நடத்தினர். முன்னதாக காலை 7 மணிக்கு அனுதின ஹோமம், தாரா ஹோமங்கள் நடைபெற்றன. திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி காலை 11:45 மணிக்கு சர்வ தரிசனம் நடைபெற்றது.
இந்த திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் தமிழ்நாடு அமைச்சர்ள் சேகர்பாபு மற்றும் மதிவேந்தன், எம்.பிக்கள் ராஜேஷ்குமார், சின்ராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, ஈஸ்வரன், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் உமா, உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமான கலந்து கொண்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
இந்த பெருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்புக்காக எஸ்.பி ராஜேஷ் கண்ணன் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆஞ்சநேயர் திருக்கூட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி, நாமக்கல் தாலுக்கா முழுவதும் இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து பாதைகளும் மாற்றம் செய்யப்பட்டன.
இதையும் படிங்க:தருமபுரியில் களைகட்டிய கலைத் திருவிழா; அசாத்திய திறமைகளை வெளிப்படுத்திய பள்ளி மாணவ-மாணவிகள்!