இந்திய தொழிலதிபர்களில் ஆனந்த் மகேந்திரா சற்று வித்தியாசமானவர். இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் ஏதேனும் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தினாலும் கூட அதனை ஊக்குவிக்கும் வகையில் தனது பாராட்டுகளை தெரிவிப்பார், ஆனந்த் மகேந்திரா.
சமீபத்தில் இளைஞர் ஒருவர் 1 லட்ச ரூபாய் மதிப்பில் ஆட்டோவிலேயே வீடு ஒன்றை உருவாக்கி இருப்பது அவரை அதிசயிக்க வைத்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த இளைஞர் அருண்பிரபு (24). சிறு வயதிலிருந்தே புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் ஆர்வம் மிகுந்த இவர், கடந்த 2019ஆம் ஆண்டு பயணிகள் ஏற்றும் மூன்று சக்கர ஆட்டோவில் சில மாற்றங்களை செய்து ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் ஆட்டோ வீடு ஒன்றை வடிவமைத்தார்.
இந்த ஆட்டோ வீட்டில் சமயலறை, குளியலறை, படுக்கையறை போன்றவையும் ஆட்டோவின் மேல் சூரிய மின் உற்பத்தி தகடு ஆகியவை இடம் பெற்றிருந்தது. இவரது "ஆட்டோ வீடு" குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. ஓராண்டிற்கு பிறகு மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, அருண் பிரபுவின் இத்தகைய ஆட்டோ வீட்டின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வெகுவாக பாராட்டியுள்ளார்.