நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், கரோனா நோய் தடுப்பு முதலமைச்சர் நிவாரண நிதி 50 லட்ச ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் துணை தலைவர் வாங்கிலி சுப்பரமணியம் பெற்றார்.
இதைத் தொடர்ந்து மின் துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "வெளி நாடுகளில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வந்தவர்கள் ஆயிரத்து 138 நபர்களில் 122 நபர்கள் 28 நாட்களை கடந்து விட்டனர். மீதமுள்ள 659 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 38 நபர்களில் 13 நபர்களுக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 25 நபர்களின் முடிவுகள் ஓரிரு நாளில் கிடைத்திடும். மேலும் 122 தனியார் ஆம்புலன்ஸ்கள் மாவட்ட நிர்வாகம் பயன்படுத்துவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. 55 தனியார் மருத்துவர்கள், 212 தனியார் செவிலியர்கள் சேவை செய்ய உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 925 ரேஷன்கடைகளில் 5.08 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 6 முதல் 8 நாட்களுக்குள் ரூ.1000 நிவாரண தொகை வழங்கப்படும்." என்றார்.