தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளத்தை தடுக்கும் ஆராய்ச்சியில் அஜித்தின் 'தக்ஷா' குழுவினர் - ஆராய்ச்சியில் அஜித்தின் 'தக்ஷா' குழு

நாமக்கல்: நடிகர் அஜித் ஆலோசகராக உள்ள ’தக்ஷா’ குழுவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நாமக்கல் மாவட்டத்தின் காவிரி கரையோர பகுதிகளில் ஆளில்லா குட்டி ரக விமானம் மூலமாக பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

daksha

By

Published : Jul 19, 2019, 6:08 PM IST

தமிழ்நாட்டில் பருவ மழைக்காலங்களில் முக்கிய ஆற்றுப் பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. அப்போது, பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அவசரமாக மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ளும் நிலை உள்ளது. காவிரி, வைகை போன்ற பெரிய ஆறுகளால் சேதம் அதிகப்படியாக விளைகிறது.

எனவே ஒவ்வொரு ஆற்றுப் பகுதியிலும் வெள்ளத்தின்போது, மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், ஆற்றுப் பகுதியில் உள்ள அணைகள், கால்வாய்கள், ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவற்றை கண்டறிவதற்காகவும், தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையின் பேரிடர் மேலாண்மைக் குழுவானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் வான்வழி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து ஆய்வுப்பணிகள் மேற்கொண்டுவருகிறது.

இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் மத்திய வானூர்திக் குழுவிடம், ஆறுகளின் கரையோரப் பகுதிகள், ஆறுகள் செல்லும் பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதற்காக, அரசு தரப்பில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மூன்றாம் தேதி முதல் ஆய்வுக்கான பணிகள் தொடங்கப்பட்டன.

ஆராய்ச்சியில் அஜித்தின் 'தக்ஷா' குழுவினர்
கடந்த இரண்டரை ஆண்டுகளில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளை இந்தக் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.

தற்போது இக்குழுவில் உள்ள தக்ஷா குழுவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பி.சௌந்தரலிங்க பாண்டி, பி.தங்கராஜன், எஸ்.ஸ்ரீராம் ஆகியோர் நாமக்கல் மாவட்டம் எஸ்.கொந்தளம், மோகனூர், செல்லிப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் வேளாண் நிலத்தில் இருந்தபடி குட்டி ரக விமானத்தை கடந்த மூன்று நாட்களாக பறக்கவிட்டு, புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். இந்த தக்ஷா குழுவிற்கு நடிகர் அஜித் ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அப்பகுதியில் முகாமிட்டு, வெள்ள பாதிப்பு பகுதிகளைக் கண்டறிந்து அறிக்கை தயார் செய்துவருகின்றனர். நிலப்பரப்பில் இருந்து சுமார் 350 அடி உயரத்தில் இந்த ஆளில்லா குட்டி ரக விமானம் பறந்தபடியே, காவிரி கரையோர பகுதிகளை புகைப்படம் எடுக்கிறது. ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் பாதிப்பு உண்டாகும் பகுதிகளை கண்டறிய இவை பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர் பி.சௌந்தரலிங்க பாண்டி கூறும்போது, ’ஆளில்லா குட்டி ரக விமானம் வாயிலாக, எடுக்கப்படும் புகைப்படம் அடிப்படையில், வரைபடம் தெளிவாக தயார் செய்ய முடியும். இதற்குமுன், கால்வாய்கள் ஏதேனும் இருந்ததா, வெள்ளக் காலங்களில் பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகள் எவை, தடுப்பு நடவடிக்கைகளை எங்கு மேற்கொள்ளலாம் என்பது தொடர்பான தகவல்கள் இதன் மூலம் கிடைக்கும்.
இன்னும் நான்கு நாட்களில் எங்கள் ஆய்வுப் பணிகள் முடிவடையும்’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details