நாமக்கல்: எருமப்பட்டி அடுத்த பொட்டிரெட்டிப்பட்டியில் ராஜ் என்பவருக்கு சொந்தமாக சக்தி பிரிக்ஸ் என்ற பெயரில் செங்கல் சூளை ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூளையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த ருத்திரன் என்பவர் குடும்பத்துடன் அங்கேயே தங்கி பல வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மதுபாலன் என்பவரிடம் ருத்திரனின் மகன் மகரஜோதி 5 லட்சம் கடனாக பெற்றுள்ளார். மேலும் அதில் 4 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கத்தை படிப்படியாக கொடுத்து கடனை குறைத்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.
இதன் பின்னர் கடந்த சில வாரங்களுக்கு எஞ்சிய 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை மதுபாலன் மற்றும் அவரது உறவினர் விவேக் ராஜா கேட்டு முறையிட்டுள்ளனர். ஆகையால் கூடிய விரைவில் பணத்தை கொடுத்து விடுகிறேன் என மகரஜோதி உறுதி அளித்துள்ளார். இதை தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதியன்று மதுபாலனின் மகனான பாஜகவை சேர்ந்த ஜெயபிரதாப் ஈரோட்டில் இருந்து பாஜக கொடி கட்டிய தனது காரில் புழுதி பறக்க சினிமாவில் வரும் காட்சியைப் போல் செங்கல் சூளைக்குள் வேகமாக கேட்டை உடைத்துக் கொண்டு வந்துள்ளார்.
அப்போது அதிவேகமாக கார் வருவதை கண்டு, அங்கு பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். பின்னர் காரில் இருந்து இறங்கிய ஜெயபிரதாப் சூளையில் இருந்த மகரஜோதியை சட்டையை பிடித்து தள்ளிவிட்டு தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளார். இதனை கண்ட மகரஜோதி குடும்பத்தார் ஜெயபிரதாப்பை தடுத்துள்ளனர்.