தனியார் பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய போக்குவரத்து காவலர் நாமக்கல்: ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று ( ஏப்.17 ) காலை 10:30 மணியளவில் ஈரோடு செல்லும் தனியார் பேருந்துக்கும், அரசு பேருந்துக்கும் இடையே யார் முதலில் செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
தினம்தோறும் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகளுக்கும், அரசுப் பேருந்துகளுக்கும் பிரச்னையானது தொடர்ந்து நடைபெற்று வருவது வழக்கம். இது சம்பந்தமாக பேருந்து ஓட்டுநர்கள் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அரசுப்பேருந்து உரிய நேரத்தில் இயக்கப்படவில்லை எனக் கூறி தனியார் பேருந்து ஓட்டுநர், அரசுப் பேருந்தை மறைத்து புதிய பேருந்து நிலையத்தில் 2 ஓட்டுநர்களும், நடத்துநர்களும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே பேருந்து நிலையத்தில் இருந்த ஊழியர்கள், போக்குவரத்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் நடராஜன், இரு ஓட்டுநர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் நடராஜன், தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து ஓட்டுநரிடம் பேருந்தை எடுக்கக் கூறி கண்டித்துள்ளார். தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்தை எடுக்க மறுக்கவே போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் நடராஜன் தாமாக பேருந்தில் ஏறி தன்னிச்சையாக பேருந்தை இயக்கியுள்ளார்.
புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து இயக்கிக் கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். காவல் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பேருந்தை நிறுத்த முயன்றுள்ளார். பெட்ரோல் பங்க் உள்ளே நுழையும் போது மின் கம்பத்தில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானது. பேருந்து மோதிய வேகத்தில் மின்கம்பம் சேதம் ஏற்பட்டு அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மின்சாரத்துறையினர் மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு அப்பகுதிக்கு மின்சாரத்தை வழங்கினார். பேருந்து விபத்துக்குள்ளானதை அடுத்து பேருந்து உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த பேருந்து உரிமையாளர் போக்குவரத்து உதவி ஆய்வாளரை சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போக்குவரத்து உதவி ஆய்வாளர் பேருந்தை ஓட்டி விபத்துக்கு உள்ளாக்கிய சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு - மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிப்பு!