நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் அருகே உள்ள குருசாமிபாளையம் நெசவாளர்கள், விசைத்தறியாளர்கள் அதிகம் நிறைந்த பகுதி ஆகும்.
இப்பகுதியில் உள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலின் பங்குனி உத்திரதேர்த் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இந்து, இஸ்லாமிய மத மக்கள் ஒன்றுகூடி, சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு கோயில் தேர்த்திருவிழா கடந்த 19ஆம் தேதி நடந்தது. இதனைத்தொடர்ந்து மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் இந்து, இஸ்லாமியப் பெருமக்கள் ஒன்று திரண்டு சந்தனம் பூசிக்கொள்ளும் நிகழ்வும் இன்று (மார்ச் 21) நடைபெற்றது. இதில் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.
நாமக்கல்லில் 118 ஆண்டுகளாக நடக்கும் இந்து-இஸ்லாமியத் திருவிழா வெள்ளைக் கொடி ஏற்றி விழா
அதனைத்தொடர்ந்து, குருசாமிபாளையம் ஊர் பெரிய தனக்காரர் ப. ராஜேந்திரன், ராசிபுரம் கிழக்குத் தெரு பள்ளிவாசல் தலைவர் G.K. உசேன் ஆகியோர் தலைமையில், சந்தனம் பூசும் விழா நடைபெற்றது.
ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மரத்திற்கு அருகில் இந்து, இஸ்லாமியப் பெருமக்கள் ஒன்றாக இணைந்து, கொடிமரத்தில் வெள்ளைக் கொடியை ஏற்றி எல்லோரும் நலமாக இருக்க துவா ஓதி பிரார்த்தனை செய்தனர். தேங்காய் பழம், நாட்டுச் சர்க்கரை, பொட்டுக்கடலை பிரசாதங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
இதனையடுத்து, இரு தரப்பு மக்களும் ஒருவருக்கு ஒருவர் சந்தனம் பூசி, ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வீடுகள்தோறும் சென்று கதவுகளில் சந்தனம் பூசினர். இந்த நிகழ்ச்சியில் இரு மதங்களைச் சேர்ந்த மக்களும் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்ததுடன், மதநல்லிணக்கத்திற்கு உதாரணமாய் இருந்தது.
இந்தக் கிராமத்தில் கோடைக்காலத்தில் ஏற்படும் கொள்ளை நோய்களைத் தடுக்கும் வகையில் இரு மதத்தினரும் இணைந்து நடத்தும் சந்தனம் பூசும் விழா 118 ஆண்டுகாலமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'தென்னை மரம் ஏறுவதெல்லாம் அசால்ட்டுடா' - 68 வயதில் அசரவைக்கும் விவசாயி மரியம்மா குட்டி!