கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு அனைத்து மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகின்றன.
அதன்படி, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த காவிரி பாலம் அருகேயுள்ள சோதனைச் சாவடியில் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டுவருகின்றன. இந்நிலையில் கரூரிலிருந்து பெங்களூரூ செல்லும் கண்டெய்னர் லாரியை சோதனை செய்ததில் லாரியில் 26 வடமாநில இளைஞர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த பரமத்திவேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், இவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா, சித்தேடுகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த மாதம் ஏஜென்ட் மூலம் திருவனந்தபுரத்திலுள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்காக அழைத்து வரப்பட்டதும் தெரியவந்தது.
பின்னர் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், வேலையிழந்து உணவிற்கே சிரமப்பட்டதாகவும், தேனி, திண்டுக்கல் வழியே நடந்து வந்தபோது ராஜஸ்தான் பதிவெண் கொண்ட லாரியைக் கண்டதால் ஓட்டுநரிடம் உதவிக்கோரி லாரியில் பயணித்து சொந்த ஊர் திரும்ப முயன்றதாகவும் தெரிவித்தனர்.
சொந்த ஊருக்கு திரும்ப முயன்ற 26 வட மாநில இளைஞர்கள் இதனையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கரோனா தொற்று பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கரோனா தடுப்பு மண்டலக்குழு சிறப்பு குழுவினர், இளைஞர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் பாதுகாப்பான இடத்தில் தனிமைப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:நடந்து வந்த கூலித் தொழிலாளர்கள்: சொந்த ஊர் செல்ல உதவிய காவல் துறை