தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடு மேய்க்கச் சென்ற பெண் பாலியல் வன்புணர்வு செய்து கொலை.. 17 வயது சிறுவன் கைது! - namakkal rape case

நாமக்கல் அருகே பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆடு மேய்க்கச் சென்ற பெண் பாலியல் வன்புணர்வு செய்து கொலை.. 17 வயது சிறுவன் கைது!
ஆடு மேய்க்கச் சென்ற பெண் பாலியல் வன்புணர்வு செய்து கொலை.. 17 வயது சிறுவன் கைது!

By

Published : Mar 13, 2023, 8:01 PM IST

நாமக்கல்:ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையத்தைச் சேர்ந்தவர், விவேகானந்தன். விவசாயியான இவர், சொந்தமாக கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இவருடன் இவரது மனைவியும் (27) வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (மார்ச் 11) மதியம் வழக்கம்போல் அவரது மனைவி, வீட்டின் அருகே உள்ள ஓடை பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இருப்பினும், மாலை 6 மணிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற ஆடுகள் மட்டுமே தானாக வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளது. இதனால் தனது மனைவி காணாமல் போனதை உணர்ந்த விவேகானந்தன், அவரைத் தேடி ஓடை பகுதிக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள முள் புதரில் ஆடைகள் கிழிக்கப்பட்டு, அரை நிர்வாண கோலத்துடன் அவர் கிடந்துள்ளார். மேலும் அவரது முகம் மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் ரத்தக் காயங்களும் இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விவேகானந்தன், இது குறித்து ஜேடர்பாளையம் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பெண்ணின் உடலைக் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனையில், உயிரிழந்த பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கழுத்தை கயிற்றைக் கொண்டு இறுக்கி கொலை செய்யப்பட்டதும், பின்னர் உயிரிழந்த பெண்ணின் உடலை 400 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்று அப்பகுதியில் உள்ள ஓடையில் வீசிச் சென்றதும் தெரிய வந்தது.

இந்த நிலையில், அப்பெண்ணை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், பிரேதப் பரிசோதனை அறிக்கையை விரைந்து தர வேண்டும் என்றும் சில கோரிக்கைகளை முன்வைத்த அவரது உறவினர்கள், பிரேத பரிசோதனை முடித்த பெண்ணின் உடலை வாங்காமல் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.‌

இதனையடுத்து இன்று (மார்ச் 13) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவரது உறவினர்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தால் மட்டுமே சடலத்தை வாங்குவோம் என தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வனின் வலியுறுத்தலின்படி, அப்பெண்ணின் உறவினர்கள் அங்கிருந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் கரப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணியாற்றி வந்த 17 வயது சிறுவனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சிறுவன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முன்னதாக இது குறித்து பேசிய விவேகானந்தன், தங்கள் பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் கொட்டகைகளில் வடமாநில இளைஞர்கள் தங்கி வேலை பார்த்து வருவதாகவும், மேலும் அவர்கள் தங்களது பண்ணைக்குட்டையில் அடிக்கடி மீன் பிடிக்க வருவதாகவும், இது தொடர்பாக அவர்களை பலமுறை எச்சரித்துள்ளோம் எனவும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆடு மேய்க்க சென்ற பெண் சடலமாக மீட்பு.. வட மாநில தொழிலாளர்கள் மீது புகார்.. நாமக்கல் போலீசார் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details