நாகப்பட்டினம்:திருமருகலை அடுத்த ஏனங்குடி ஊராட்சி, தேப்பிராமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கமலபதி. இவரது மகள் ஜெயஸ்ரீ(24). தற்போது இவர் ஏனங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மருங்கூர் சத்திரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் மணிகண்டன்(35) கூலித் தொழிலாளியான இவரும், ஜெயஸ்ரீயும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜெயஸ்ரீயிடம் அவரது பெற்றோர், மணிகண்டனிடம் பேசுவதை நிறுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். தனது பெற்றோர் கூறியபடி ஜெயஸ்ரீயும், மணிகண்டனுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டதாக தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து, காதலி தன்னுடன் பேசாததால் ஜெயஸ்ரீ மீது மணிகண்டன் மிகுந்த ஆத்திரத்திலும், கோபத்திலும் இருந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய ஜெயஸ்ரீயை சந்தித்த மணிகண்டன், உன்னிடம் தனியாக பேச வேண்டும் எனக்கூறி அழைத்துள்ளார். அதற்கு ஜெயஸ்ரீ, அதான் எல்லாம் முடிந்து விட்டதே. இனி என்ன பேச வேண்டி உள்ளது? என மணிகண்டனிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
அதற்கு மணிகண்டன் 10 நிமிடம் மட்டும் பேசி விட்டு சென்று விடு. அதன் பிறகு நான் உன்னை தொல்லை செய்ய மாட்டேன் என பரிதாபமாக கூறியுள்ளார். இதனை நம்பி ஜெயஸ்ரீ மணிகண்டனுடன் சென்றுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயஸ்ரீயின் கழுத்தை அறுத்து விட்டு மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், மணிகண்டன் கத்தியால் கழுத்தை அறுத்ததில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த ஜெயஸ்ரீயை பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது மருத்துவமனையில், ஜெயஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருக்கண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்ஐ சுரேஷ் உள்ளிட்ட போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரின் பேச்சைக் கேட்டு, காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:சீமானுக்கு எதிரான புகாரில் விஜயலட்சுமியிடம் 2வது நாளாக விசாரணை.. சிரித்த முகத்துடன் சென்றதன் காரணம் என்ன?