நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் அருகே கீழவெளிப் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் ஆனந்தன் (38). இவர் வெளிநாட்டில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். மூன்று மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். அதீத குடிப்பழக்கமுடைய ஆனந்தன், திடீரென்று ஊரடங்கு அமலுக்கு வந்ததால் மதுபானம் கிடைக்காமல் தவித்துள்ளார்.
இதனால், தான் வெளிநாட்டில் பணியாற்றியபோது யாருக்கும் தெரியாமல் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி குடித்த அனுபவத்தைக் கொண்டு, தனது வீட்டிலேயே சாராயம் காய்ச்சி குடித்து வந்துள்ளார். ஊரெல்லாம் மது இல்லாத நேரத்தில் இவர் மட்டும் குடிபோதையில் மிதப்பதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து, அவரது வீட்டை ஆராய்ந்தபோது எதுவும் புலப்படவில்லை.
தினந்தோறும் குடிபோதையில் உள்ளதைக் கேள்விப்பட்ட குத்தாலம் காவல்துறையினர் நேற்று முன்தினம் மாலை ஆனந்தன் வீட்டில் நுழைந்து சோதனை செய்தபோது திடுக்கிட்டனர். அங்கே மூடிபோட்ட பிளாஸ்டிக் வாளியில் ஊரல் இருந்ததைக் கண்டனர். அதில் சீனியும் ஈஸ்ட்டும் கலக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
தொடர் விசாரணையில், அதை ஊரவைத்து குக்கரில் ஊற்றி எரியவைத்து அதன் மூடியிலிருந்து ஒரு டியூபை சொருகி அதை தண்ணீர் வழியே மற்றறொரு இடத்தில் வடிய வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதனையடுத்து, கள்ளச்சாராய ஊரல், அதற்குப் பயன்படுத்திய குக்கர், 1 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஆனந்தனைக் கைதுசெய்து காவலில் அடைத்தனர்.
இதையும் படிங்க:'பழக்கடைகளை சேதப்படுத்திய ஆணையர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - மனித உரிமை ஆணையம்