யானைகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் பண்பாட்டோடும் பண்டிகைகளோடும் கலந்து விட்டவை. பலமிக்க யானை அன்பிற்கு கட்டுபட்டிருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யானையின் அன்பை பெற, ஆசியை பெற ஆசைப்படுவதுண்டு. நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினமான யானைகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஆகஸ்ட் 12 யானைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என்ற பழமொழியை நாம் அனைவரும் கேட்டிருப்போம். திருவிழாக் காலங்களில் சுவாமி புறப்பாட்டின் போது முன்னே அழகாக அசைந்தாடி வரும் யானையின் அழகை காணக் கண் கோடி வேண்டும். தமிழர்களுக்கும் யானைகளுக்கும் இடையே பிரிக்க முடியாத உறவு காலம் காலமாக இருந்து வருகிறது.
மதுரை மீனாட்சியின் அரசாட்சி குறித்து பாடும் 'அல்லி அரசாணி மாலை' என்ற பாடல் தொகுப்பில் 'மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்லென்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை' என்று பாடப்பட்டுள்ளது. மன்னர்கள் காலத்தில் யானை படை மிக முக்கியமானதாக கருதப்பட்டது. பெரிய கோவில்களை கட்டுவதற்கு யானைகள் பல உதவிகள் செய்துள்ளன. யானைகள் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றளவும் யானைகளை கோவில்களில் வைத்து பராமரித்து வருகிறோம்.
அதேபோல தனியார் சிலரும் யானைகளை பராமரித்து வருகின்றனர். அதேபோல நாடாளும் அரசனை தேர்ந்தெடுக்கவும், யானைகளை விட்டு மாலை போடும் வழக்கமும் அந்த காலத்தில் இருந்தது. வளர்ப்பு யானைக்கும், அதன் பாகனுக்கும் இடையேயான உறவு மகத்தானது.
யானைகள் இலை, செடி, கொடி, மூங்கில், கரும்புகளை விரும்பி உண்ணும். தினமும் 200 லிருந்து 250 கிலோ இலை, தழைகளையும், 150 லிருந்து 200 லிட்டர் வரை தண்ணீரையும் உட்கொள்கிறது. யானைகளிடம் ஆசீர்வாதம் வாங்குவதன் மூலம் தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம்.