தமிழ்நாடு

tamil nadu

புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடை: ஒப்பாரி போராட்டம் நடத்திய பெண்கள்!

By

Published : Oct 22, 2020, 3:39 PM IST

நாகப்பட்டினம்: பாலகுறிச்சி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் டாஸ்மாக் கடை முன் ஒப்பாரிவைத்து போராட்டம் நடத்தினர்.

புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடை: ஒப்பாரி போராட்டம் நடத்திய பெண்கள்!
Newly opened tasmac

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரை அடுத்த பாலகுறிச்சி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடை இன்று (அக். 22) திறக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதையறிந்த பாலக்குறிச்சி, இறையான்குடி, வடக்குபனையூர் அகரம், முப்பத்திகோட்டகம் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் விளைநிலத்திற்கு மத்தியில் கட்டப்பட்ட மதுபான கடையை திறக்கக் கூடாது எனக் கூறி கடையை முற்றுகையிட்டனர்.

பின்னர், கடை முன் கூடிய பெண்கள் கீழே அமர்ந்து, 'குடியினால் குடும்பம் சீரழியும்' எனக்கூறி ஒப்பாரி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பெண்களின் முற்றுகைப் போராட்டத்தால், மதுபான கடையை திறக்கவந்த டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறக்க முடியாமல் திணறினர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கீழையூர் காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது விளைநிலத்திற்கு மத்தியில் டாஸ்மாக் கடை அமைந்தால், விளைநிலம் பாதிக்கப்படுவதுடன், வேளாண் பணியில் ஈடுபடவரும் இளைஞர்கள் மதுபோதைக்கு அடிமையாக நேரிடும். இதனால், இந்தக் கடையை இங்கு அமைக்கக் கூடாது எனத் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால், கடையை திறக்கவந்த டாஸ்மாக் அலுவலர்களும் காவல் துறையினரும் கடையைத் திறக்காமல் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details