நாகப்பட்டினம் மாவட்டம் ஒத்தூரில் புதிதாக அமைய உள்ள மருத்துவ கல்லூரிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மருத்துவ கல்லூரிக்கான கட்டடம் கட்டும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த கட்டட பணியில் தஞ்சாவூரை சேர்ந்த கண்ணன் என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். ஒரு நாள் பணியின்போது கண்ணனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும், அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கண்ணனின் இறப்பு சான்றிதழ் கேட்டு அவரது மனைவி ஜூலி கடந்த மூன்று மாதங்களாக அலைந்து வருகிறார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள அவர், “தனது கணவர் கண்ணனின் இறப்பு சான்றிதழ் வழங்கக்கோரி ஒரத்தூர் கிராம நிர்வாக அலுவலர், வேளாங்கண்ணி காவல் நிலையம், வேளாங்கண்ணி பேரூராட்சி என இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலர்களிடம் முறையிட்டும் அவர்கள் இறப்புச் சான்றிதழ் வழங்காமல் என்னை அலைக்கழித்து வருகின்றனர்.
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களை கடந்து வெகு தொலைவிலிருந்து இறப்பு சான்றிதழுக்காக கடந்த மூன்று மாத காலமாக நாகைக்கு தினந்தோறும் அலைந்து வருகிறேன். கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் வருமானம் இன்றி தவிக்கும் இந்த சூழலில் பேருந்து கட்டணத்திற்குக்கூட வழியில்லாமல் தவித்துவருகிறேன். உடனடியாக எனது கணவரின் இறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களின் வாழ்வாதாரத்தை காக்க நிவாரணம் வழங்க வேண்டும்.” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.