'மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்றே யானைக் கட்டி போரடித்த பெரும்நிலம்' என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியான காவிரி டெல்டா மாவட்டங்கள் மழைக்கும் வழியின்றி இன்று வானம் பார்த்த பூமியாய் காத்துக்கிடக்கின்றன.
குறுவை, தாளடி, சம்பா என முப்போக விளைச்சல்களைக் கண்ட காவிரி டெல்டா மாவட்டங்களாக தஞ்சை, திருவாரூர், நாகை இன்று ஒருபோக சாகுபடிக்கே வழியில்லாமல் தவித்துவருவதற்கு நீர் ஒன்றே காரணமாக இருக்கிறது.
கர்நாடகம் காவிரி நீரை திறந்துவிடாததாலும், பருவமழை பொய்ப்பதாலும் மேட்டூர் அணையிலிருந்து போதிய நீர் இருப்பு இல்லாத சூழலே தொடர்ந்து வந்ததால் அணையிலிருந்து உரிய நேரத்தில் திறக்கப்படுவதில்லை என அறிய முடிகிறது. இதன் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி என்பது பல ஆண்டுகளாக வெறும் கனவாக மட்டுமே உள்ளது.
கடந்த 9 ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் நீர் திறக்கப்படுவதில்லை என்பதால் காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேதனை அடைவது தொடர் கதையாகிவிட்டது.
இந்நிலையில், மேட்டூர் அணையில் காவிரி நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர் திறப்புக்கான வாய்ப்புள்ளதாக விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது. ஆனால், காவிரிநீரை மட்டுமே நம்பியுள்ள ஏறத்தாழ இரண்டு லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்தைக் கொண்டிருக்கும் காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்ட விவசாயிகள் துயரத்தில் மூழ்கியே உள்ளனர். ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும், கடைமடை பகுதியான நாகைக்கு பாசன நீர் வருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளதே இதற்கு காரணம்.
இது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய காவிரி கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன், “கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஆண்டுக்கான குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கும் அறிவிப்வை தமிழ்நாடு அரசு வெளியிட்டு, அதற்கான நிதியையும் ஒதுக்கியது. ஆனால், கரோனா பாதிப்பினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலால் மதகுகள் சீரமைப்பது, வாய்க்கால்கள் தூர்வார்வது என அனைத்து குடிமராமத்துப் பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டன. இதனால், காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்டத்திற்கு காவிரி நீர் வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடைமடைக்கு காவிரி நீர் வந்துசேர விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்த அரசு இந்தாண்டு, குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணையைத் திறப்பதற்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால் காவிரி கடைமடைப் பகுதிவரை நீர் தங்குதடையின்றி நாகை மாவட்டத்திற்குள் வருவதற்கான வழிவகையை குடிமராமத்துப் பணிகளை நிறைவேற்றி அரசு செய்திட வேண்டும். மேலும், தடையில்லா மின்சாரம், தட்டுப்பாடு இல்லாத விதை நெல், உரம், கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தி விவசாயிகளுக்கு நம்பிக்கை தர வேண்டும்.
விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க தகுந்த இடைவெளியைப் பின்பற்றி போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள குடிமராமத்துப் பணிக்கு கரோனா விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்” எனக் கோரிக்கைவிடுத்தார்.
'விவசாயம் என்பது வியாபாரம் அல்ல, அது வாழ்க்கை முறை' என்பதை உணர்ந்து விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் வகையில் அரசு குடிமராமத்துப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
இதையும் படிங்க :முந்திரி தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!