மயிலாடுதுறை: சீர்காழி அருகே கீழமூவர்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர், சக்திவேல் (45). இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சக்திவேல், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினந்தோறும் குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளார்.
இதேபோல் நேற்றும் (மே 11) தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து சக்திவேல் சந்தேகத்திற்கு இடமான முறையில் தீக்காயங்களுடன் எரிந்த நிலையில் வீட்டின் அறையில் இறந்து கிடந்துள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் மனைவி வசந்தாவிடம் விசாரித்தபோது, தன்னிடம் தகராறு செய்துவிட்டு கணவன் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
அதனை நம்பிய உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் இன்று (மே 12) சக்திவேலின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்திருந்தனர். இதனையடுத்து இறந்த சக்திவேலின் உடலைக் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு தகனமேடையில் கிடத்தி இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் புகழ்வேந்தன் சக்திவேலின் இறப்பின் மீது சந்தேகம் இருப்பதாக சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக்-கிடம் தொலைபேசி வாயிலாகப் புகார் தெரிவித்துள்ளார்.