மயிலாடுதுறை: விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் சீர்காழியிலிருந்து தரங்கம்பாடி வரை 4 வழிச்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட குடியிருப்பு இடம், விவசாய நிலம் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என கடந்த 2 ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய இழப்பீடு பெற்று தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா பூந்தாழை கிராமத்தில் நேற்று (ஜூலை29) 4 வழிச்சாலை அமைக்கும் பணியை ஜேசிபி வாகனம் கொண்டு மேற்கொண்ட போது, இழப்பீடு வழங்கிய பின் பணியைத் தொடங்குங்கள் என்று கூறி பாதிக்கப்பட்டவர்கள் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.