நாகப்பட்டினம்: கடந்த 2017ஆம் ஆண்டு, நாகூர் ஆண்டவர் தர்காவை நிர்வகிப்பது குறித்து சில குழப்பங்கள் ஏற்பட்டது. இதனால், தர்காவை நிர்வாகிக்க, தற்காலிக கமிட்டி அமைக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில், 2017ஆம் ஆண்டு, தற்காலிக கமிட்டி அமைக்கப்பட்டது. மேலும் இந்த கமிட்டி நான்கு மாதங்களுக்கு மட்டுமே, தர்காவை நிர்வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2017 முதல் 2022 வரை தற்காலிக கமிட்டியே, தர்காவை நிர்வகித்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நாகூர் தர்காவின் விழாவில், ஒருவரை அனுமதிப்பது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இந்த வழக்கில், நாகூர் தர்காவின் தற்காலிக நிர்வாக கமிட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் பரத சக்ரவர்த்தி ஆகியோர், மேல்முறையீடு மனுவை ரத்து செய்து, தர்கா நிதியை தேவையின்றி பயன்படுத்தி மேல்முறையீடு செய்ததற்காக, தற்காலிக கமிட்டிக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், தற்காலிக கமிட்டியிடம் இருந்த நிர்வாக பொறுப்பை, வக்ஃப் வாரியம் உடனடியாக ஏற்க உத்தரவிட்டனர்.