மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி தாலுகா அல்லிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (52). கூலி தொழிலாளியான இவர் காத்திருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே காலி பாட்டில்களை சேகரித்து வருகிறார். வழக்கம் போல் ரவி காத்திருப்பு டாஸ்மாக் கடை அருகே அமைந்துள்ள நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வளாகத்திற்குள் சென்று அங்கு கிடந்த காலி பாட்டில்களை சேகரித்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக தனியார் நிறுவனத்தினர் அமைத்திருந்த மின்விளக்கு கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து தனியார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவன வளாகத்தில் இருந்த உயிரிழந்த ரவியின் உடலை எடுக்க மறுத்தனர். மேலும் அவருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.