தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ராட்சத குழாய்களை வைக்க கிராம மக்கள் எதிர்ப்பு - சாலை மறியல்!

மயிலாடுதுறை அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ராட்சத குழாய்களை தனியார் இடத்தில் இருப்பு வைக்க எதிர்ப்புத்தெரிவித்து, அப்பகுதி கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எனப் பலரும் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.

சாலை மறியல்
சாலை மறியல்

By

Published : Apr 1, 2022, 8:53 PM IST

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே வை.பட்டவர்த்தி கிராமத்தில் நீடுரைச் சேர்ந்த அமீனுல்லா என்பவருக்குச் சொந்தமான இடத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், கனரக வாகனங்கள் மூலம் இன்று (ஏப்.1) கொண்டுவரப்பட்ட ராட்சதக் குழாய்களை இறக்கி வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டது.

இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையும் பொருட்படுத்தாமல், அந்நிறுவனம் ஐந்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் ராட்சத குழாய்களைக் கொண்டு வந்து இறக்கியுள்ளது. எண்ணூர்-தூத்துக்குடி இடையே எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்காக, இந்த ராட்சத குழாய்கள் இறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், அதனை ஏற்காத கிராம மக்கள் குழாய்களை அப்புறப்படுத்தக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது மக்கள் சாலை மறியல்

பொதுமக்கள் போராட்டம்: இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் காளிதாசன், பாமக மாவட்டச் செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ரவி, இயற்கை விவசாயி ராமலிங்கம் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை-மணல்மேடு இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தற்காலிகமாக தள்ளிவைப்பு: பேச்சுவார்த்தையின் முடிவில் மயிலாடுதுறையில் ஆர்டிஓ பாலாஜி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என அலுவலர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இருந்தபோதிலும், பேச்சுவார்த்தையில் ராட்சத குழாய்கள் அப்புறப்படுத்துவது தொடர்பாக உரிய தீர்வு ஏற்படாவிட்டால் மீண்டும் அனைத்து கிராம மக்களையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வினாத்தாள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம்: 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கல்

ABOUT THE AUTHOR

...view details