நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் கிராமத்தில் கடற்கரைப் பகுதிகளில் நீண்ட நாள்களாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு உள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பல முறை காவல் துறையினரிடம் புகாரளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கள்ளச்சாரயம் குடித்து தங்களது கணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சுமத்திவருகின்றனர். ஆனாலும் எந்த அரசு அலுவலர்களும் இதனைக் கண்டுகொள்வதாய் இல்லை. இதற்கிடையே பிரதாபராமபுரம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர், கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு 15 நாள்களுக்கும் மேலாக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.