மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி. இவர் தனது மாமியாருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு அந்த ஊரின் கிராம நிர்வாக அலுவலர் பேச்சியம்மாளிடம் விண்ணப்பம் அளித்து காத்திருந்தார். இந்நிலையில், ஓய்வூதியம் பெற்றுத் தர கிராம நிர்வாக அலுவலர் பேச்சியம்மாள் ஆயிரத்து ஐநூறு ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இந்த லஞ்சப்பணத்தில் 500 ரூபாயை குறைக்க அஞ்சலி கோரியுள்ளார்.
இதற்கு கிராம அலுவலர், தான் என்ன செய்ய முடியும். அலுவலகத்தில் கேட்கிறார்கள் என பதிலளிக்கிறார். இந்த லஞ்ச விவகாரத்தில் தனக்கு ரூ.200 கொடுத்தால் போதும் எனவும் அஞ்சலியை நம்பி ஆர்.ஐ.,க்கு 300 ரூபாயை தன் கையிலிருந்து கொடுத்ததாகவும் கூறுகிறார்.
மீதமுள்ள லஞ்ச பணத்தைத் தாலுக்கா அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று துணை வட்டாட்சியரிடமும், தாசில்தாரிடமும் கொடுத்துவிட்டு பேசிக்கொள்ளச் சொல்கிறார் கிராம நிர்வாக அலுவலர். மற்றவர்களிடம் பணம் வாங்கிக் கொள்ளாமல் விண்ணப்பம் வாங்கியுள்ளதாகக் கேட்டதற்கு, பணம் தராதவர்களுக்கு இம்மாதத்துடன் உதவித்தொகை வழங்கப்படுவது நிறுத்தப்படும் என மிரட்டலாகப் பதிலளிக்கிறார்.