மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், மணக்குடி கிராமத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பூம்புகார் கலைக்கல்லூரி, தீயணைப்பு நிலையம், சுற்றுலா மைய மேம்பாட்டுப் பணி, திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெரம்பூர் காவல் நிலையம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் 1773ல் கட்டப்பட்ட டேனிஷ் ஆளுநர் மாளிகையையும் சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து திருவிழந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். அதில், சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் அனைத்துத்துறை அதிகாரிகளிடமும் வளர்ச்சி திட்டப் பணிகளின் நிலவரம் குறித்தும், பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இருக்கும் திட்டங்களை விரைந்து முடிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், "சட்டசபையில் முதலமைச்சர் ஒப்புதலோடு அமைச்சர்கள் அறிவிக்கப்படும் திட்டங்களை 3 மாதத்திற்குள் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத் திட்டங்கள் மக்களிடம் தடையின்றி செல்ல வேண்டும். அதற்கு அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு அலுவலருக்கும் ஒருவகையில் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான ஆற்றல் படைத்தவர்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 250 திட்டங்கள் அரசால் அறிவிக்கப்பட்டு 85 பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 111 பணிகள் ஒப்புதல் பெற்ற நிலையில் உள்ளது. சாலை அமைத்தல், வாய்க்கால் தூர்வாருதல் என நீண்டநாளாக 38 பணிகள் நிலுவையில் உள்ளது. அதில் 8 பணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவற்றை விரைந்து முடிக்க அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளோம்.