தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 நாள்களாக வெள்ளத்தில் தவிக்கும் வெள்ளப்பள்ளம் கிராமத்தினர்! - வெள்ளப்பள்ளம் கிராமத்தில் வெள்ளம்

மயிலாடுதுறை: அடுத்தடுத்து உருவான புயல் காரணமாக பெய்த மழையினால் வெள்ளப்பள்ளம் பகுதியிலுள்ள மேம்பாலத்தின் மீது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. உப்பனாற்றின் கரைகள் உடைந்து கிராமத்திற்குள் புகுந்த தண்ணீர் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியினரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய வெள்ளப்பள்ளம் கிராமம்
வெள்ளத்தில் சிக்கிய வெள்ளப்பள்ளம் கிராமம்

By

Published : Dec 9, 2020, 7:47 PM IST

மயிலாடுதுறை, சீர்காழி அருகே அமைந்துள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

நிவர், புரெவி ஆகிய புயல்களின் காரணமாக பெய்த தொடர் மழையால் இந்தக் கிராமத்தைச் சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து தற்போது தீவு போல காட்சியளிக்கிறது.

ஒரு புறம், கீராநல்லூர் - வெள்ளப்பள்ளத்தை இணைக்கும் விதமாக உப்பனாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு மேலே தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மற்றொரு புறம், புதுத்துறையை இணைக்கும் விதமாக கட்டப்பட்டிருந்த மேம்பாலத்தின் மேலேயும் இடுப்பளவு தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

இதனால் இந்த கிராமத்தில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஒரு சிலர் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பாலத்தை கடந்து தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கி வருகின்றனர். இது மட்டுமின்றி உப்பனாற்றின் கரைகள் உடைந்து கிராமத்திற்குள் புகுந்த தண்ணீர் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய வெள்ளப்பள்ளம் கிராமம்

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். உடனடியாக அரசு அலுவலர்கள் உப்பனாற்றின் கரை உடைப்பை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details