நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என்று போற்றப்படும், புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. உலக சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்து பிரார்த்தனை செய்கின்றனர். தமிழ்நாட்டின் பிரதான சுற்றுத் தலங்களில் ஒன்றாகவும், இந்த வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயம் திகழ்கிறது.
இந்த ஆலயததின் ஆண்டு நவநாள் பெருவிழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இவ்விழாவின் முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி எனப்படும், தேர் திருவிழா நேற்று (செப். 7) இரவு நடைபெற்றது. முன்னதாக தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில், நவநாள் திருப்பலிகள், மாதா மன்றாட்டு, கூட்டு பிராத்தனை அதை தொடர்ந்து திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து தேர் புனிதம் செய்யப்பட்டு கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு உத்திரியமாதா தெரு, என கடைவீதி வழியாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் அதிதூதர், செபஸ்தியார், சூசையப்பர், உத்திரிய மாதா, ஆரோக்கிய மாதா ஆகிய 7 தேர்களில் தனியாக காட்சி அளித்தனர்.