தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

நாகை: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

velankanni festival flag hoist

By

Published : Aug 29, 2019, 10:07 PM IST

கீழ்த்திசை நாடுகளில் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

முன்னதாக புனித ஆரோக்கிய மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஆலயத்திலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியே எடுத்து வரப்பட்டு, பின்னர் ஆலயத்தை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து, கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து, சிறப்பு திருப்பலி மேற்கொண்டு கொடியேற்றம் செய்தார்.

மாதாவின் திருஉருவம் பொறிக்கப்பட்ட கொடி கம்பத்தின் உச்சியை அடைந்ததும், ஒரே நேரத்தில் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த வண்ண விளக்குகள் ஏற்றப்பட்டு, வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன. அப்போது வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பரவசத்துடன் வழிபாடு நடத்தினர்.

இதையடுத்து, ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி நடைபெறுகிறது. ஆண்டு விழாவை முன்னிட்டு பத்து நாட்களும் நவநாள் ஜெபம், மாதா மன்றம், கூட்டுப்பாடல் திருப்பலி, நற்கருணை ஆசீர் ஆகியவை கொங்கணி, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடைபெறுகின்றன.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

லட்சக்கணக்கானோர் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளதால் இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் ஆலயத்தின் சார்பிலும் செய்து தரப்பட்டுள்ளன.


ABOUT THE AUTHOR

...view details