நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத் திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுற்றது.
வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்க பல்வேறு வழிகளும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து விழாவின் நிறைவு நாளான நேற்று (செப்., 8) கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பேராலய பங்கு, தந்தை சூசைமாணிக்கம் தலைமையில் நன்றி அறிவிப்பு ஜெபம் செய்து ஆலயத் திருவிழாக் கொடி இறக்கப்பட்டது . பின்னர் பேராலயத்தில் மாதா மன்றாட்டு, திவ்யநற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பும் அதைத் தொடர்ந்து தமிழில் திருப்பலி நடைபெற்றது.
கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்ற வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பி. பிரவீன் நாயர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று (செப்., 9)முதல் வெளியூர், வெளி மாநில பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதால், ஐந்து மாதங்களுக்குப் பிறகு வேளாங்கண்ணியில் அதிகளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.