நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா இன்று மாலை (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறுப் பகுதிகளில் இருந்தும் பங்குபெறும் இந்தத் திருவிழா, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டு அரசிற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையிலும் பக்தர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டும் பக்தர்கள் இல்லாமல் நடைபெறுகிறது.
அரசு ஆணையை ஏற்று அருட்தந்தையர்கள் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் திருவிழாவை வீட்டில் இருந்தபடியே கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 4. 30 மணியளவில் ஆலயத்தைச் சுற்றி திருக்கொடி பவனி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் திருக்கொடியை ஏற்ற உள்ளார்.