மயிலாடுதுறையில் முன்னாள் வன்னியர் சங்க பிரமுகர் கண்ணன் நேற்று நள்ளிரவு கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கண்ணன் உடலை பெற்றுகொள்ளாமல் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, துணை தலைவர் ம.க.ஸ்டாலின், உழவர் பேரியக்கத்தலைவர் ஆலயமணி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவர்களை சந்தித்து உறுதியளித்ததன் பேரில் இறந்த கண்ணன் உடலை பெற்றுகொண்டு ஊர்வலமாக பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கொத்தத் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துசென்றனர்.
இச்சம்பவம் குறித்து வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி கண்டனம் தெரிவித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த கொடூர படுகொலையை தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் செய்திருக்கிறார்கள். கண்ணனின் தலையெல்லாம் சிதைந்து, மார்புபகுதி மாடுவெட்டும் கத்தியால் உடைக்கப்பட்டு பார்க்கவே முடியாத நிலைக்கு கொடூர படுகொலை செய்யப்பட்டுள்ளது. கோரக்கொலைகள் நடைபெறும் போது நீதிமன்றம் கைதிகளுக்கு மரணதண்டனை விதிப்பது இயல்பு.
மரணதண்டனைக்கூறிய கொடூர கொலையை நிகழ்த்தி இருக்கிறார்கள். வன்னியர்கள் மீது மிகுந்த வன்மம் கொண்டவர்களாக அவர்கள் இருக்கின்றனர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தலைவர்கள் அதை ஊக்குவித்து தங்கள் அரசியலை நடத்த வேண்டுமென்ற காரணத்தால் இந்த படுகொலைகள் நடந்து வருகிறது. காவல்துறை தாழ்த்தப்பட்ட சமூதாயத்தினருக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை வைத்துகொண்டு கொலை செய்யப்பட்டவன் வன்னியராக இருந்தால் மெத்தனபோக்கும். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக்கூடிய யாருக்கும் சட்டத்தில் எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை என்பதை காவல்துறை உணரவில்லை.