நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கூறைநாட்டில் வன்னியர் சங்கத்திற்குச் சொந்தமான 10 ஆயிரம் சதுர அடி இடம் உள்ளது. தமிழ்நாடு அரசு வன்னியர் பொதுச் சொத்து நலவாரியம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடம் தொடர்பாக பாமகவின் வன்னியர் சங்கம், வன்னியர் மேம்பாட்டு இயக்கம் இடையே ஏற்கனவே பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், அந்த இடத்தில் தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சாமி. நாகப்பனின் சிலையை வைக்க வன்னியர் மேம்பாட்டு இயக்கம் சார்பில், வன்னியர் பொதுச்சொத்து நல வாரியத்திடம் அனுமதி பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து, மார்பளவு வெண்கலச் சிலை கடந்த 5ஆம் தேதி திறக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி பாமக பொறுப்பாளர்கள், சிலை நிறுவப்பட்ட இடத்தில், இவ்விடம் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான வன்னியர் சங்கத்திற்குச் சொந்தமானது என்று அறிவிப்பு பலகையை வைத்துவிட்டு, அதனைப் பூட்டிச் சென்றனர். இதனையடுத்து அங்கு திரண்ட வன்னியர் மேம்பாட்டு இயக்கத்தினர் அரசிடம் முறையாக அனுமதி பெற்று சிலை வைத்துள்ள நிலையில், இப்படி செய்வது முறையானது அல்ல என வாதிட்டனர்.