கர்நாடக நீர் பிடிப்புப்பகுதிகளில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக வெள்ளநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையும் முழுக் கொள்ளளவு எட்டியதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நீரானது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று, பழையார் அருகே கடலில் கலந்து வருகிறது. இதனால் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டுக்கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல் உள்ளிட்ட கிராமங்கள் கடந்த ஆறு நாள்களாக போக்குவரத்து இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.
தாழ்வானப்பகுதியில் வசிக்கும் மக்கள் படகின் மூலமும் தண்ணீரைக் கடந்து வந்தும், அரசின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்குத்தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. நேற்று காலை நீரில் அளவு குறைந்ததால் நிவாரண முகாம்களில் இருந்து வீடுகளுக்குத் திரும்பி இருந்தனர்.