கரோனா தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல் ஒர்க் ஃப்ரம் ஹோம் (work from home) என்ற வார்த்தை பரவலாகிவிட்டது. நோய்த் தொற்றைத் தவிர்க்கவும் பணியாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டும், ஊழியர்களை வீடுகளிலிருந்தே வேலை செய்யும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் ஒர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறை அரசு அலுவலகங்களுக்கு சாத்தியமில்லை, அதுவும், நேரகாலமின்றி நேரடி மக்கள் சேவையில் உள்ள உள்ளாட்சித் துறைகளில் வாய்ப்பே இல்லை என்ற சூழலில், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் ஊழியர்களின் நலன் கருதி ஊழியர்களே ஒன்று சேர்ந்து கூட்டாஞ்சோறு போல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை சமைத்து அசத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி அலுவலகத்தில், ஆண், பெண், கர்ப்பிணி என பல்வேறு தரப்பினரும் பணி புரிந்து வருகிறார்கள். கரோனா தொற்றின்போதும்கூட மக்களுக்காக பணியாற்றும் ஊழியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி என்பது முக்கியம். அதைக்கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு சத்தான உணவுகளைக் கொடுக்க எண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் 'குக் ஃப்ரம் ஆஃபிஸ்' என்னும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.
இது குறித்து செயல் அலுவலர் குகன் கூறுகையில், "சத்தான ஆரோக்கிய உணவு முறை பற்றி தெரிந்திருப்பது என்பது வேறு. அதனைக் கடைபிடிப்பது என்பது வேறு. ஒன்றைப் பற்றி தெரிந்திருப்பதால் மட்டும் அது நமக்கு பலனளித்துவிடாது. அதைக் கடைபிடித்தால் மட்டுமே பலன்பெற முடியும். ஊழியர்களுக்கு சத்தான உணவு வழங்க குக் ஃப்ரம் ஆஃபிஸ் திட்டத்தை இங்கே கடைபிடிக்கத் தொடங்கியுள்ளோம். இது அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டால் களத்தில் சுழலும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க முடியும்" எனத் தெரிவித்தார்.