தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைத்து சமூக சிக்கலையும் கல்வி மூலம் மாற்றலாம் - வானவில் ரேவதி - வானவில் சிறப்புப் பள்ளி நாகப்பட்டினம்

நாகை: பொருளாதாரத்திலும் சமூகத்திலும் பின்தங்கியுள்ள மக்களின் வாழ்வை மாற்றும் வல்லமை கல்விக்கு உண்டு. அந்த வகையில் ஆதியன் இன (பூம்பூம் மாட்டுக்காரர்கள்) மக்களின் குழந்தைகளின் வாழ்வை மாற்றும் 'வானவில் ரேவதி'.

vaanavil

By

Published : Oct 30, 2019, 10:22 PM IST

Updated : Nov 1, 2019, 9:56 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை அடுத்த கீழக்கரை இருப்பில் அமைந்துள்ளது வானவில் உண்டு, உறைவிடப்பள்ளி. 'பூம்பூம் மாட்டுக்காரர்கள்' என்று கூறப்படும் ஆதியன் இன குழந்தைகளுக்கான இந்தத் தனி பள்ளியை நடத்திவருகிறார் ரேவதி.

பெரும்பாலும் பூம்பூம் மாட்டுக்காரர்களான ஆதியன் மக்கள் கல்வியறிவு பெறாமல் நாடோடிகளாகவே தங்களின் வாழ்வை நடத்துபவர்கள். இதனால் அவர்களின் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லாமல் பொதுமக்களிடம் யாசகம் கேட்டு வாழ்ந்துவருகின்றனர்.

வானவில் பள்ளி

ஒரு சிலர் கல்வி கற்க விரும்பினாலும், இவர்களுக்கு அரசு சான்றிதழ்கள் கிடைப்பதில்லை என்பதால் கல்வி என்பது இவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்த சூழலில் 2005ஆம் ஆண்டு உதித்ததுதான் இந்த வானவில் என்ற வண்ணப்பள்ளி!

சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்கும் நாடோடி சமுதாய மக்களை, படித்த பட்டதாரிகளாக உருவாக்க வேண்டுமென்பதைக் குறிக்கோளாக வைத்து, வானவில்லை உருவாக்கி வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கிறார் வானவில் ரேவதி.

கல்வி கற்கும் மாணவர்கள்

பத்திரிகையாளர், ஆவணப்பட இயக்குநர் என பன்முகங்களை கொண்டிருந்தாலும், அவற்றைவிட வானவில் பள்ளி மாணவர்களின் அக்காவாக தன்னை பெருமையுடன் அடையாளப்படுத்திக்கொள்கிறார் ரேவதி.

இச்சேவையை முன்னெடுக்க உந்துதலாக இருந்த சூழலை நம்மிடம் நினைவுகூரும் அவர், "2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தக்கூட ஆட்கள் இல்லை என நண்பர்கள் சொல்ல, அதனைக் கேட்ட மறுகணம் நானும் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னையிலிருந்து நாகைக்கு வந்தேன்.

வானவில் ரேவதி

சுனாமியால் கடலோர மீனவர் மக்கள் மட்டுமின்றி அவர்களுடன் சார்ந்து வாழும் பின்தங்கிய சமூக மக்களும் பெரும் பாதிப்பைச் சந்தித்திருந்தது புரிந்தது. உலகெங்கும் இருந்து உதவிகள் குவிந்தபோதும், 'ஆதியன்' என்று சொல்லக்கூடிய பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கும் நரிக்குறவர்களுக்கும் நிவாரண உதவிகள் கிடைக்காமலிருந்தன.

இந்த மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டுமெனில் கல்வி ஒன்றே அதற்கான வழி என்பதை அறிந்தேன். மேலும் நாடோடி சமூக குழந்தைகளால் மற்ற சமூக குழந்தைகளோடு இயல்பாகப் பழக முடியாது என்பதைப் புரிந்துகொண்டேன். அப்போது உதித்ததுதான் வானவில். அவர்களுக்கென தனி ஒரு பள்ளி" என்று தன் பெரும் பயணத்தை ரத்தினச் சுருக்கமாக விவரிக்கிறார்.

புத்தர்

குழந்தைகளின் பெற்றோருக்கே தங்கள் பிள்ளைகள் படிப்பார்கள் என்ற நம்பிக்கையில்லாமல் இருந்தபோதும், ரேவதி தனது முயற்சியில் எள்ளவும் பின்வாங்கவில்லை. ஆசிரியர்கள் மீதுள்ள பயத்தைப் போக்க பள்ளியின் சார்பில் சொந்தமாகச் சைக்கிள்கள் வாங்கி இங்குப் பயிலும் அனைவரும் அதை எடுத்துக் கொண்டு சுற்றி வரலாம் என்றும், வாரம் ஒரு சினிமா எனப் பல யுக்திகளைக் (அக்குழந்தைகளை உளவியல் ரீதியில் வலுவாக தயார்படுத்த) கையாண்டார்.

2005ஆம் ஆண்டு 25 குழந்தைகளைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த வானவில் பள்ளியில் தற்போது 160 குழந்தைகள் பயின்றுவருகின்றனர். இதுவரை இந்தப் பள்ளியிலிருந்து 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

அனைத்து சமூக சிக்கலையும் கல்வி மூலம் மாற்றலாம்

குழந்தையாக இருந்தபோது பிச்சையெடுத்த முருகம்மாள், தற்போது ஆசிரியர் பயிற்சி முடித்து இதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார் என மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் ரேவதி. இது மட்டுமின்றி பல கிராமங்களில் இரவு நேர வகுப்புகள் நடத்துவதன் மூலம் 1500 மாணவ, மாணவிகளுக்குக் கல்வி கற்பிக்கப்படுகிறது.

இருப்பினும் தமிழ்நாட்டில் இதுபோன்ற 13 மாவட்டங்களில் எண்ணற்ற ஆதியன் சமூக மக்கள் கல்வி வெளிச்சம் கிடைக்காமல் இருக்கிறார்கள். அரசும் தன்னார்வலர்களும் வானவில்லுடன் கைகோர்த்தால் அம்மக்களுக்கான கல்வியை முழுமையாகச் சாத்தியப்படுத்த முடியும் என்று கண்ணில் நம்பிக்கை மின்னப் படபடக்கிறார் வானவில் ரேவதி.

இதையும் படிங்க: அலையோடு போராடும் மீனவர்களுக்கு வருமானம் அள்ளித்தரும் கூண்டு மீன் வளர்ப்பு!

Last Updated : Nov 1, 2019, 9:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details