மயிலாடுதுறை:டெல்டா மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய கனமழை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்தது. இதில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், பருவம் தவறி பெய்த கனமழை காரணமாக அறுவடைக்குத் தயாரான பயிர்கள் சேதமடைந்த காரணத்தால், ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.
அதன் அடிப்படையில் நேற்று (பிப்.8) மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, "மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,71,000 ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் சுமார் 35,000 ஏக்கர் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள், பருவம் தவறி பெய்த கனமழையால் நீரில் மூழ்கியுள்ளன.