திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை பயணம் மேற்கொள்வதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை வந்தார். தனியார் திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவிகளுடனான சந்திப்பில் அவர் பேசுகையில், விவசாய திருத்தச் சட்டங்கள் அமல்படுத்தபட்டால் விவசாயம் கார்ப்பரேட் கைகளில் சென்றுவிடும் என்று திமுக அச்சட்டங்களை எதிர்த்தது. அதிமுக அரசு பாஜக சொல்வதற்கெல்லாம் தலையாட்டியபடி, அச்சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்ற மகிழ்ச்சியான தகவலை அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர். பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியை அளித்ததைப் போன்றே இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்கள் அக்கூட்டணியை தோல்வி அடையச் செய்வர்.
திமுகவை ஆட்சியில் அமரச் செய்வார்கள். திமுக தலைவரின் அறிக்கைகளை அரசியல் செய்வதாக விமர்சிக்கும் அதிமுக அதையே அரசாணையாக வெளியிட்டு செயல்படுத்திவருகிறது. மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று குழு கூறியபோதும், அமித்ஷா, மோடி கோபித்துக்கொள்வார்கள் என தமிழ்நாடு அரசு 7.5விழுக்காடு இடஒதுக்கீட்டையே வழங்கியது.