நாகை:தமிழ்நாட்டில் அடுத்தாண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவும் 'எல்லாரும் நம்முடன்' போன்ற பரப்புரைத் திட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாகை மாவட்டம் திருக்குவளையிலிருந்து 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் இன்று முதல் பரப்புரையைத் தொடங்க முடிவு செய்திருந்தார். மே மாதம் வரை 100 நாட்கள் இந்தப் பரப்புரையை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதன்படி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த இல்லம் எதிரே அமைக்கப்பட்டிருந்த மேடையில் பரப்புரை தொடங்க திட்டமிடப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் பரப்புரை செய்யும் இடத்திற்கு வருவதற்கு முன்பு தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ் குமார் மீனா தலைமையில், 10 டிஎஸ்பி, 14 ஆய்வாளர்கள் என 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்று அங்குள்ள சிலைகள், திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து பின்னர் மேடையில் ஏறி தனது பரப்புரையை உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார்.