நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ள நீடூர் கீழத்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (58). இவர் கடந்த 8 ஆண்டுகளாக அந்த பகுதியின் நாட்டாமையாக உள்ளார். இதற்கு அதே தெருவை சேர்ந்த வேல்முருகன் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து நேற்று இரவு அதேபகுதியில் உள்ள கோயிலில் இளங்கோவன்(58) தனது ஆதரவாளர்களான பிரபாகரன்(30), பூமிநாதன், இளவரசன்(32), எழிலரசன் (27), இளையராஜா, பாலு(55), பிரேம்குமார் மற்றும் தங்கமணி ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த வேல்முருகன் தரப்பைச் சேர்ந்த 15 பேர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் ஆயுதங்களை கொண்டு தாக்கி கொண்டதில் இளங்கோவன் தரப்பை சேர்ந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை கிராம மக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இளவரசன் மற்றும் தங்கமணி ஆகிய இருவரும் இறந்தனர். மற்ற ஆறுபேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி விஜயகுமார், டிஎஸ்பிக்கள் வெள்ளத்துறை, சுவாமிநாதன் ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர். மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.