மயிலாடுதுறை:செந்தில்குமார் (45) என்பவர் எரவாஞ்சேரி கிராமத்தில் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
இதேபோல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (26) என்பவர், அதே கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (10), மகேஷ் (12) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள கஞ்சாநகரத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
தரங்கம்பாடி தாலுகா திருவிளையாட்டம் அருகே குமாரமங்கலம் மெயின் ரோட்டில், மயிலாடுதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆசிரியர் செந்தில்குமார் எதிரே வந்த தமிழ்ச்செல்வன் ஆகியோரின் இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து விபத்தில் காயமடைந்த ஆசிரியர் செந்தில்குமார், ஆகாஷ், மகேஷ் ஆகிய மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.